கடிதம் அனுப்பினால் 15 நாளில் வங்கிக்கடன்: ப.சிதம்பரம் உறுதி!
திருச்சி செய்தியாளர் ஆர்.சுப்பிரமணியன்
கல்விக் கடன் கிடைக்காதவர்கள் அஞ்சலட்டையில் பெயர், முகவரி, வங்கியின் பெயர், அலுவலர் பெயர் ஆகியவற்றை எனக்கு எழுதி அனுப்பினால் 15 நாட்களில் வங்கிகடன் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்தார்.
திருச்சியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியா ஏழை நாடல்ல. ஆனால் ஏழை மக்கள் இருக்கிறார்கள். சிலர் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போதுதான் மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறார்கள். ஏழ்மையை ஒழிப்பதில் காங்கிரஸ் கட்சியை விட வேறு எந்த கட்சியும் அதிக சிறப்புகளை பெறவில்லை. கடந்த பா.ஜ.க. ஆட்சியில் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,175 கோடி ஒதுக்கியது. ஆனால் தற்போதைய அரசு 2003-04ல் ரூ.7 ஆயிரத்து 324 கோடி ஒதுக்கியுள்ளது. காலத்தை வைத்துதான் மனிதனை மதிக்க முடியும் என்றார்.
காமராஜர் காலத்தில் மத்திய அரசிடமிருந்து, மாநில அரசுக்கு கல்விக்கென நிதி ஒதுக்கவில்லை என்றாலும் பள்ளி கல்வியில் ஏற்றம் காண முடிந்தது. 2004 மார்ச் 31 வரை நாட்டில் 3 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு ரூ.4 ஆயிரத்து 559 கோடி மட்டுமே கல்விக் கடன் வழங்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கு 99 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. ஆங்காங்கே சிலர் கடன் வழங்க மறுக்கிறார்கள். கடன் வழங்க மறுப்போர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. கல்விக் கடன் கிடைக்காதவர்கள் அஞ்சலட்டையில் பெயர், முகவரி, வங்கியின் பெயர், அலுவலர் பெயர் ஆகியவற்றை எனக்கு எழுதி அனுப்பினால் 15 நாட்களில் வங்கிகடன் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று ப.சிதம்பரம் உறுதியளித்தார்.
இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதில் இடதுசாரி கட்சிகள் பொறாமைப்படுகின்றன என்றும் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.