தமிழகத்தில் சேகோ, ஸ்டார்ச் உற்பத்தியாளர் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களின் முன்னேற்ற நலச் சங்க கூட்டம் தலைவர் துரைசாமி தலைமையில் நடந்தது.
முதல்வரின் அறிவிப்பு, வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கேட்டு கொண்டதற்கு இணங்க சேகோ மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
இன்று முதல் சேகோ ஆலை செயல்படும். இப்பிரச்னை தொடர்பாக வல்லுனர் குழு, எங்கள் நிர்வாகத்தையும் நேரில் அழைத்து பேசி சுமூக தீர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து சங்க தலைவர் துரைசாமி கூறுகையில், இம்மாதம 14ம் தேதி நலத்திட்ட துவக்க விழாவுக்கு முதல்வர் வருகிறார். சேகோ ஆலை தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நல்லது அல்ல. ஆகையால் எங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளோம். சேலம் வரும் முதல்வரை நேரில் சந்தித்து பேச உள்ளோம் என்றார்.
இந்த நிலையில் வேலைநிறுத்தம் ஒத்திவிக்கப்பட்டதன் எதிரொலியாக சோகோ ஆலைகள் தங்கள் உற்பத்தியை இன்று காலை முதலே சுறு, சுறுப்பாக தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த குச்சிக்கிழங்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.