செங்கல்பட்டில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறினார்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டில் மத்திய அரசு சார்பில் விரைவில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. அரசாங்கத்தின் சார்பில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற் பூங்கா அமைய இருப்பது இதுவே முதல் முறையாகும். 200 ஏக்கரில் இந்த தொழிற்பூங்கா அமையும். அம்மை குத்தும் கருவிகள் உள்பட பல மருத்துவக் கருவிகள் இங்கு தயாரிக்கப்படும் என்று அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
தற்போது நமக்குத் தேவையான மருத்துவக் கருவிகளில் 10 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதி 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. புதிய தொழிற்பூங்கா அமைவதன் மூலமும், இது போன்ற கூட்டு முயற்சிகள் மருத்துவக் கருவிகள் தயாரிக்கப்படுவதன் மூலமும் நமது மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவக் கருவிகளை தயாரித்துக் கொள்ள முடியும் என அன்புமணி கூறினார்.
இப்போது கூட்டு முயற்சியில் மருத்துவக் கருவிகள் தயாரிப்பதை ஊக்கப்படுத்துவதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். இது போன்ற கூட்டு முயற்சியால் அமையும் தொழிற்பூங்காக்களுக்கு மானியம் அளிக்கும்படி நிதி இலாகாவையும், தொழிற்துறையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.