விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சிமெண்ட் இறக்குமதி செய்யப்படுவதற்காக இந்திய அரசின் தரச் சான்று விதிகளை உடனடியாக தளர்த்துமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி இருந்தார். இதைத்தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்வதற்கு சிறப்பு அனுமதியை தற்போது மத்திய அரசு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்திற்கு வழங்கியுள்ளது என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசும், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் என்ற வீதத்தில் 18 லட்சம் டன் சிமெண்ட்டை உலகளாவிய ஒப்பந்தம் மூலம் நேரடியாக இறக்குமதி செய்திட முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன என அமைச்சர் கூறியுள்ளார்.
மினரல்ஸ் மற்றும் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலம் 5 லட்சம் டன் சிமெண்ட் இறக்குமதி செய்வதற்கும் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான அளவு சிமெண்ட் கிடைக்கும். விலையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.