வரும் 12ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணத்திற்க படகு பயணப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக பொது மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட உணவு, மருந்து பொருட்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கொடுக்க கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மார்ச் மாதத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த பதிலும் இதுவரை இல்லை என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, வரும் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரையிலும், மதுரையில் இருந்து ராமேஸ்ரத்திற்கும் பயணம் நடைபெறும் என்று நெடுமாறன் தெரிவித்தார்.
வரும் 12ஆம் தேதி நாகப்பட்டினம், ராமேஸ்வரம் ஆகிய துறைமுகத்தில் இருந்து காலை 10 மணிக்கு இலங்கைத் தமிழர்களுக்கான மனித நேய உதவிப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிச் செல்லும் படகு பயணப் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.