ஆட்டோ கட்டணம் குறித்து ஜெயலலிதா நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு குற்றம் சாற்றியுள்ளார்!
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து குறைந்தபட்சம் 2 கி. மீட்டருக்கு ரூ.14 எனவும் அதன் பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.6 எனவும் உயர்த்தப்பட்டது. இது 26.1.07 முதல் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை அனைத்து சங்கங்களும் வரவேற்றுள்ளன என அமைச்சர் நேரு குறிப்பிட்டுள்ளார்.
மற்ற மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது குறித்து அனைத்து சங்கங்களுடன் பேசி முடிவெடிக்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு, ஒருவர் தீக்குளித்து இறந்தது மிகவும் வேதனைக்குரியது என்று நேரு தெரிவித்துள்ளார்.
5 ஆண்டு கால ஆட்சியில் ஒருமுறை கூட ஆட்டோ கட்டணத்தை அதிகப்படுத்திக் கொடுக்க முன்வராத ஜெயலலிதா, தற்போது அறிக்கை விட்டு ஆட்டோ ஓட்டுநர்களை ஏமாற்றலாம் என்று முயற்சிக்கிறார். ஆனால் இவரது வார்த்தைகளை நம்பி அவர்கள் ஏமாறத் தயாராக இல்லை என நேரு கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அன்றாடம் விடுக்கும் அறிக்கையின் தொடர்ச்சியாக போக்குவரத்துத் துறை பற்றி, குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்சினை குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்று அமைச்சர் நேரு குற்றம்சாற்றியுள்ளார்.