ஆட்சியில் இல்லையே என்ற ஆதங்கத்தில் தினமும் அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் மருத்துவமனை கட்ட 2004ஆம் ஆண்டு பணம் ஒதுக்கியதாகவும், கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை காழ்ப்புணர்ச்சி காரணமாக திறக்கப்படவில்லை என்றும், அதை திறக்கக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். மருத்துவமனைக்கு 2004 ஆம் ஆண்டே நிதி ஒதுக்கியதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அதற்குப் பிறகு 2 ஆண்டு காலம் அவர்தான் ஆட்சியில் இருந்திருக்கிறார். அப்போதே கட்டி முடித்திருக்கலாம் அல்லவா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்றும், பயிர்க் கடன் வழங்கவில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். விவசாயிகளுக்கு கழக ஆட்சியிலே எதுவும் செய்யப்படவில்லையா என்பதை விவசாயிகளே நன்கறிவார்கள். ஜெயலலிதா போராட்டம் அறிவித்துள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 2006-07 ஆம் ஆண்டுகளில் ரூ.167 கோடியில் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.
சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்த 4 பயங்கர குழுக்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், இதைப்பற்றி கவலைப்படாமல் கருணாநிதி இருப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். யானையின் மீது உட்கார்ந்து கொண்டு 'ஈ' நினைத்துக் கொள்ளுமாம், அந்த யானையை அந்த ஈயே ஓட்டிச் செல்வதாக, அப்படித்தான் ஜெயலலிதா நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் விமர்சிக்கிறார். எல்லாவற்றிலும் தலையிட்டு 'குட்டு' பெறுகிறார். பாவம் - ஆட்சியில் இல்லையே என்ற அவஸ்தை, ஆதங்கம், ஆத்திரம் - அதனால்தான் அன்றாடம் அறிக்கை என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.