நாடாளுமன்றத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கையா நாயுடு, தீவிரவாதிகளின் கூடாரமாக ஹைதராபாத் இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிரவாதத்தை தடுப்பதாக தெரியவில்லை. கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளை சமாதானப்படுத்தவே காங்கிரஸ் கட்சிக்கு நேரம் போதவில்லை. எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரலாம் என்றார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். ஜெயலலிதா அமைத்துள்ள 3வது அணியில் கருத்து வேறுபாடு உள்ளது என்று வெங்கையா நாயுடு கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். போபாலில் நடைபெறும் எங்கள் கட்சியின் செயற்குழுவில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆராயப்படும் என்று தெரிவித்தார்.