விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதை நெல், உரம் ஆகியவற்றை வழங்கக் கோரி தஞ்சையில் வரும் 5 ஆம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்துக்கு தேவையான விதை நெல் மற்றும் உரம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு உள்ளதால் அவற்றை வெளி சந்தைகளில் விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்குவதோடு, அவை தரமற்ற நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் சொல்லொணாத் துயரம் அடைந்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன்கள் கூட்டுறவு வங்கிகள் முலம் எவ்விதத் தடையும் இன்றி வழங்கக் கோரியும், நெல் விதைகள், உரம் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரியும் வரும் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு தஞ்சை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.