பெரு நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற மத்திய அரசின் தகவலையடுத்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல் கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில்குமரன் கூறியுள்ளார்.
43 பேர் உயிரிழக்கக் காரணமான ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் அதிகம் புழங்கம் பெரு நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதென மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன், தமிழக காவல்துறை இயக்குநகருக்கு மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்திருப்பதாகவும், இதனையடுத்து மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
சென்னையில் தாக்குதல் அபாயம் என்ற குறிப்பிட்ட எச்சரிக்கை தகவல் எதுவும் இல்லை என்றும், இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கு விடுதிகள், சந்தை பகுதிகள் உள்ளிட்ட முகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாஞ்சில் குமரன் கூறினார்.