தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்தக் கோரி கோத்தகிரியில் நாளை பேரணி நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தேயிலை மானியத்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் வாட் வரி விதிப்பை அமுல் படுத்தியதால் தேயிலையின் விலை மிகக்கடுமையான அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர். ஆனால் இந்த உத்தரவை திமுக அரசும், மத்திய அரசும் நிறைவேற்றாமல் தொடர்ந்து மெத்தனமாகவே இருந்து வருவதாக கூறியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்தக் கோரி நாளை அதிமுக வின் சார்பில் கோத்தகிரியில் பேரணி நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.