அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 3 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இதுவரை 91,576 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 1,01,623 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வருகிற மார்ச் மாதத்திற்குள் 3 லட்சம் பேருக்கு வீட்டுமனைகள் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்த அவர், இத்திட்டத்தை சிறப்பாக செய்ய மாவட்ட ஆட்சியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக கூறினார். மாவட்டங்களுக்கு தலா 7,000 சிறிய பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சிமிண்ட் விலையை குறைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அரசு கட்டுமானப் பணிகளுக்கான சிமிண்ட் விலையை குறைப்பதாக சிமிண்ட் ஆலை அதிபர்கள் உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.