கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று இவ்வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. உமாபதி அறிவித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அத்வானி கோவையில் பிரச்சாரம் செய்ய வந்தபோது அங்கு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமுற்றனர்.
இத்தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான அல் உம்மா தடை செய்யப்பட்டது.
இத்தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று 167 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
குற்றம்சாட்டப்பட்ட 167 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்கள் மீதான தீர்ப்பு இன்று முதல் வழங்கப்படும் என்றும் நீதிபதி உமாபதி கூறியுள்ளார்.
கோவை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் 850 கி.கி. ஜெலட்டின் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவைகளை வெடிக்கச் செய்ய 3,000 அதிநவீன வெடிப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
மைசூரில் இயங்கி வரும் இந்திய வெடிபொருள் கழகத்தில் இருந்து இந்த வெடிபொருட்கள் வாங்கப்பட்டதாகவும், அந்நிறுவனம் ரியாஸ் உர் ரகுமான் என்பவருக்கு சொந்தமானது. அதன் மேலாளா மொகமது தஸ்தகி. இவர்கள் இருவரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த வெடிபொருட்கள் மைசூரில் இருந்து பேருந்து வாயிலாக சத்தியமங்கலத்திற்குக் கொண்டு வரப்பட்டு பிறகு அங்கிருந்து கார்கள் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டு பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டதென காவல்துறை கூறியுள்ளது.
டி.என்.டி. என்று அழைக்கப்படும் வெடிபொருட்கள் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியின் உதவியுடன் ஆர்.வி. ராஜூ என்பவர் கேரளாவில் வாங்கியுள்ளார்.
கோவை நகரத்தில் 19 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக மொகம்மது பாசித் என்பவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் 181 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களில் 7 பேர் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டனர். 5 பேர் தலைமறைவாக உள்ளனர். மொகம்மது தஸ்தகிர் விசாரணையின்போது காலமானார். ரியாஸ் என்பவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி சாட்சியமளித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி விசாரணை துவங்கி 2006ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சாட்சிகள் விசாரணை நடந்தது.
இவ்வழக்கில் 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், 1731 ஆதார ஆவணங்களும், 480 ஆதாரப் பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(யு.என்.ஐ)