தூத்துக்குடி, நெல்லை மாட்டங்களில் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து போரட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செய்லாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மிகக்குறைந்த விலையில் நிலங்களை கையகப்படுத்தி அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்க திமுக அரசு முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழக அரசுக்கும் டாடா நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி தொழில்நுட்ப வர்த்தக சாத்தியகூறு ஆய்வு மேற்க்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது மக்களிடம் இருந்து வந்த மனுக்களின் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களின் கருத்துரை கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் விதிக்கப்பட்ட சில நிபந்தனைகளை டாடா நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.
அங்கே ஆறு மீட்டர் ஆழம் தோண்டுவதால் அப்பகுதியில் உள்ள மரங்கள் அழிந்து பாலைவனமாகிவிடும் என்று வனத்துறையும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் தெரிவித்தன. எனவே மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கேடு விளைவிக்கக் கூடியதாகவும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இத்திட்டம் அமையும் என்று அறிந்தேன். அதன் பின்னர், 2005 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் காலாவதியாக விட்டுவிட்டேன்.
பின்னர், டாடா நிறுவனத்தின் மூலமும், அரசு அதிகாரிகள் மூலமும் எனக்கு எவ்வளவோ நெருக்கடி கொடுக்ககப்பட்டும் அத்திட்டத்தை செயல்படுத்த நான் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் கோப்பு என்னிடம் திரும்பத் திரும்ப அனுப்பப்பட்ட போதும் விவசாயிகள், மக்கள் நலன் கருதி அதில் கையொப்பம் இடாமல் அதை திருப்பி அனுப்பி விட்டேன்.
டைட்டானியம் தொழிற்சாலை மூலம் ஆயிரம்பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஆயிரம் பேருக்கு அந்த தொழிற்சாலையில் வேலை கிடைத்தாலும், இது போன்ற உயர் தொழிற் நுட்பம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை.
அப்படியே வேலை கொடுத்தாலும், கொத்தனார் வேலை, பெயின்ட் அடிக்கும் வேலை, பூங்காக்கள் அமைக்கும் வேலை, அதிகாரிகள் வீட்டில் துணி துவைக்கும் வேலை, சுத்தம் செய்யும் வேலை போன்ற எடுபிடி வேலைகள் தான் கிடைக்கும். அள்ள அள்ள குறையாத அட்ச பாத்திரம் போல விலை மதிப்புள்ள டைட்டானியம் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் கிடைக்கும் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு சந்தை விலையை டாடா நிறுவனம் தரும் என்று விளம்பரப்படுத்துகிறார் முதலமைச்சர்.
20 ஆயிரம் வாழ்வாதார உரிமையான நிலத்தைப் பற்த்து ஆயிரம் பேருக்கு நேரடி வேலை, 3 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை என்று மக்கள் மனதில் மாயையான நம்பிக்கையை ஏற்படுத்தி ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் திமுக அரசின் செயலை அதிமுக எதிர்க்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எதிரான இத்திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு வற்புறுத்தி அதிமுக சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும். அந்த போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்பேன். போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
டைட்டானியம் ஆலையை அரசே அமைக்கலாம் என்று ராமதாஸ் யோசனை கூறியிருக்கிறாரே என்று கேட்ட போது, இத்திட்டம் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் அல்ல. இந்த முறையே தவறானது. இன்னும் ஆய்வு செய்து அதன் பின் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.