ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மந்தவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் காவல் துறையிடம் புகார் செய்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் சங்கரமட மேலாளர் சங்கரராமன் கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சங்கரமட தூண்டுதலின் பேரில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர், விஜேந்திரரின் தம்பி ரகு, அப்பு, கதிரவன், ஆனந்த், உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 12 பேர் மீதும் சென்னை குற்றவியல் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஜெயேந்திரர் உள்ளிட்ட சிலர் பிணைய விடுதலை பெற்றனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 12 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இன்று ( 23 - 07 - 07 ) நீதிமன்றத்தி தவறாமல் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜெயேந்திரர் உள்ளிட்ட 12 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானர்கள்.
இதனைத்தொடர்ந்து 12 பேர் மீதும் 3 பிரிவுகளில் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.