சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் மின்சார ரயில்களின் பயண நேரத்தை தென்னக ரயில்வே மாற்றியமைத்ததை எதிர்த்து பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் மின் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது!
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்கங்களில் செல்லும் புறநகர் மின்சார ரயில்களின் நேரங்களை தென்னக ரயில்வே சில நாட்களுக்கு முன் மாற்றியது. இதனைக் கண்டித்து ஆங்காங்கு பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
பயணிகளின் கருத்தை ஏற்றுக்கொண்டு பழைய நேர அட்டவணைப் படியே மின் ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே உறுதியளித்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில், இன்று மாலை சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் கூடிய பயணிகள் நேர அட்டவணையை மாற்றாததைக் கண்டித்து ரயில் பாதை¨யில் இறங்கி மறியல் செய்தனர்.
மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் இன்னமும் நீடித்து வருகிறது. இரண்டரை மணி நேரமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிக்கின்றனர்.
ரயில்வே நிர்வாகத்தில் இருந்து எவரும் வந்து பயணிகளுடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது.