பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு கூட்டம் இன்று ( புதன் கிழமை) தொடங்குகிறது. கலந்தாய்விற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதல் நாளான இன்று ஊனமுற்றவர்களுக்கும், 19, 21 ஆகிய தேதிகளில் தொழில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 23 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்விற்கு 91,093 பேர் அழைக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டி. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதி கலந்தாய்வு முடிவடைகிறது.
இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதிகள் கலந்தாய்விற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.