பெருந்தலைவர் காமராஜாரின் 105வது பிறந்தநாளான இன்றுமுதல் சத்துணவில் வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்!
சென்னை சிந்தாதரிப்பேட்டை மாநகராட்சி உயர் நிலைப் பள்ளியில் இன்று நடந்த விழாவில் கலந்துகொண்ட கருணாநிதி, மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு மற்றும் சர்க்கரைப் பொங்கலை வழங்கி வாரத்திற்கு 3 முட்டைத் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
சத்துணவில் 3 முட்டை வழங்குவதற்கு காரணம், சிறுவர்கள் கல்வி கற்பதுடன் ஊக்கம் பெறவேண்டும் என்பதற்காகத்தான். கல்வி கற்று மூளை வளர்ச்சி மட்டும் பெற்றால் போதாது. உடல் வளர்ச்சியும் பெறவேண்டும் என்ற எண்ணம்தான் என்று கூறிய கருணாநிதி, பெற்றோர்கள் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். சிறார்கள் உடல் வலுவும், உள்ள வலுவும் பெறவேண்டும் என்று கூறினார்.