குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவு அளிக்குமாறு மாநிலங்களை எதிர் கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான ஜஸ்வந்த் சிங், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இநத சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், ஜெயலலிதாவுடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாகவும், இது குறித்து டெல்லி சென்ற பின்னர் பாஜக மூத்த தலைவர்களுடன் விவாதிக்க இருப்பதாகவும் கூறினார்.
டெல்லியில் வருகிற 15 ஆம் தேதி நடைபெற உள்ள ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா, அப்போது தனது கோரிக்கை குறித்து கூட்டணி தலைவர்களுடன் விவாதிப்பார் என்றும் அவர் கூறினார்.