தமிழக அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இன்று ஒரு நாள் மட்டும் மருத்துவ கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
நெய்வேலியை சேர்ந்த மரிய அருள்ரெக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் 2005 - 2006 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட புதிய +2 பாடத்திட்டம் கஷ்டமாக உள்ளது என்றும், பழைய பாடத்திட்டம் இலகுவாக உள்ளது என்றும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
பழைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவ தரவரிசை பட்டியலில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பழைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்க்ளையும், புதிய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களையும் ஒன்றாக சேர்த்து தரவரிசை பட்டியல் வெளியிடக் கூடாது என்றும், புதிய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதி ஆகியோர் வழக்கு விசாரணையை ஜூலை 9 ஆம் தேதிக்கு ( இன்று ) தள்ளி வைத்தனர். இந்நிலையில் மரிய அருள்ரெக்ஸ் மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில், 10 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறாது என அரசு தரப்பில் உத்திரவாதம் அளித்திருப்பதால், இரு தரப்பு வழக்கறிஞர்களின் சம்மதத்தின் பேரில் இன்று ( செவ்வாய் கிழமை) காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.