மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியதும் குறுவை சாகுபடிக்காக அணையை திறக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டுர் அணையை திறக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பெரியகருப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா, மேட்டூர் அணையின் நீர்மட்டம், தற்போது 85 அடியாக உள்ளது என்றும், அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்ந்ததும் அணை திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95 அடியாக உயர்ந்ததும் குறுவை சாகுபடிக்காக அணையை திறக்க வேண்டும் என்றும், இதுபற்றிய அறிவிப்பை 10 நாட்களில் அரசு வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.