அஞ்சல் துறையை கணினிமயமாக்க ரூ.40 கோடி ஒதுக்கியிருப்பதாக மத்திய அமைச்சர் ஆ.ராசா தகவல்!
பெரம்பலூரில் கடந்த 12 ஆண்டுகளாக கிளை அஞ்சல் நிலையமாக இயங்கி வந்த தபால் நிலையம், தலைமை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது.
மத்திய அமைச்சர் ஆ.ராசா இதை திறந்து வைத்து பேசியதாவது, நமது நாட்டில் 1,60,000 தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 30 முதல் 40 சதவீத தபால் நிலையங்கள் முற்றிலும் கணினிமயமாக்கப்பட உள்ளது.
மீதி உள்ள தபால் நிலையங்கள் படிப்படியாக கணினி மயமாக்கப்படும். இப்பணிக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் திருச்சி அஞ்சல் மண்டபம், முதல் கட்டமாக முற்றிலும் கணினி மயமாக்கப்படும். வருகிற ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் ஆயுள் காப்பீட்டு கழகமாக மாறும். பெண்களின் அதிகாரத்தை பயன்படுத்தும் வகையில் நபார்டு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தபால் நிலையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசினார்.