சென்னையில் நடைபெற உள்ள மகளிர் பேரணியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் இன்று சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரி கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரதீபா பட்டீலை ஆதரித்து சென்னையில் இன்று மகளிர் பேரணி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று பிற்பகல் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா, ஜி.கே.வாசன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
இன்று மாலை மன்ரோ சிலையில் இருந்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை நடைபெறும் மகளிர் பேரணியை பிரதீபா பாட்டீல், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு மேடையில் இருந்து பார்வையிடுகின்றனர்.
இதனை தொடர்ந்து பிரதீபா பட்டீலுக்கு கருணாநிதி விருந்து அளிக்கிறார். இதில் அனைத்து கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.