மதுரை இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி ஓராண்டு கால ஆட்சியின் சாதனைகளுக்கும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய வாய்மைக்கும் கிடைத்த பரிசு என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டப் பேரவை இடைத் தேர்தல் முடிவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அங்கு 3 ஆண்டுகளாகப் பணியாற்றிய 163 காவலர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றிட வேண்டும் என உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் அனைத்தும் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டன என்றும், தேர்தல் அன்று தமிழக அரசின் காவல்துறை அதிகாரிகளை வாக்குச் சாவடிகளில் பொறுப்பேற்க இந்திய தேர்தல் ஆணையம் தடையாணை பிறப்பித்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனையும் மீறி வாக்காளர்களும், வாக்குகளை சேகரிப்பதற்காகப் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினரும் இந்த மகத்தான வெற்றியை தேடித் தந்திருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.