வடக்கு ஆந்திரம், தெற்கு ஒரிசா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் ஆங்காங்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
தென்மேற்கு பருவ மழை ஆந்திராவில் பரவலாக பெய்து கொண்டிருக்கும் நிலையில், கேரளம், கர்நாடகத்தின் கடலோர, வடக்கு மையப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை உட்பட வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆங்காங்கு மழை பெய்துள்ளது என்று கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் ஆங்காங்கு மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
சென்னையிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு முறை மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.