அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த அணு ஆயுதக் கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் சென்னை வருகைக்கு இடது சாரிகளும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஈராக் போரில் முக்கியப் பங்காற்றிய நிமிட்ஸ் விமான தாங்கி அணு ஆயுதக் கப்பல் அடுத்த மாதம் சென்னைக்கு வருகிறது. சென்னை துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பகுதியில் இக்கப்பல் நிறுத்தப்பட உள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இந்தக் கப்பல் இந்தியக் கடற்பகுதிக்கு வருகை தர உள்ளது.
இதன் வருகைக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நிமிட்ஸ் கப்பலின் வருகைக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நிலோத்பால் பாசு, இந்த கப்பலின் வருகை சீனத்திற்கு ஒரு அச்சுறுத்தலை தர இந்தியாவைப் பயன்படுத்தும் ஒரு ரகசிய திட்டமாகும் என்று கூறியுள்ளார்.
"சீனத்தையும் மற்ற நாடுகளையும் கட்டுப்படுத்தும் தங்களது திட்டத்தில் இந்தியாவை இழுக்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு அங்கம்தான் இக்கப்பலின் வருகை என்று நிலோத் பால் வாசு கூறியுள்ளார்.
ஈராக் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, பெருகி வரும் சீனத்தின் பலத்தை கண்டு பொருக்கமுடியாமலேயே தனது திட்டத்திற்கு இந்தியாவை உட்படுத்த முயற்சித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு அங்கம்தான் நிமிட்ஸின் வருகை என்று கூறியுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோனி, இதில் எதுவும் புதிதல்ல என்று கூறியுள்ளார்.
ஆனால், நிமிட்ஸின் வருகை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!
அமெரிக்க அணு ஆயுத கப்பல் சென்னை துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த அணு ஆயுதக் கப்பலில் இருந்து கதிர்வீச்சு வெளியாகும் அபாயம் உள்ளதால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அணு ஆயுதக் கப்பல் இந்திய கடற்பகுதிக்குள் வருவது ஆபத்தானது என்று நீர்வழிப் போக்குவரத்து பணியாளர்கள் கூட்டமைப்பு, மத்திய கப்பல் துறை செயலருக்கும், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளது.
(யு.என்.ஐ.)