மதுரை மேற்கு சட்டப் பேரவை இடைத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் பார்வையாளர்களுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது!
புதுடெல்லியில் இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு மதுரை மேற்கு சட்டப் பேரவை இடைத் தேர்தலிற்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இடைத் தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தலைநகர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மேற்கு இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அதிகாரிக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, மதுரை மேற்கு சட்டப் பேரவை இடைத் தேர்தல் நிர்ணயித்தபடி வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.