குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்துவது தொடர்பாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அஇஅதிமுக, தெலுகு தேசம், சமாஜ் வாதி, மதிமுக உள்ளிட்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி, குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை நிறுத்துவதென தீர்மானித்தது.
இதற்கான முடிவு கடந்த 18 ஆம் தேதி சென்னையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து தேர்தலில் மீண்டும் போட்டியிடுமாறு வலியுறுத்த ஜெயலலிதா இன்று காலை டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 5 பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தையொட்டி இன்று காலை முதலே சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.