வரும் 26 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மதுரை மேற்குத் தொகுதியில் பெரும் அளவிற்கு வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது என்ற புகார் தொடர்ந்து வருவதையடுத்து தேர்தலை தள்ளிவைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்!
மதுரை இடைத் தேர்தல் தொடர்பாக அரசு அதிகாரிகளுடனும், காவல் துறையினருடனும் இன்று காலை மதுரையில் ஆலோசனை நடத்திய நரேஷ் குப்தா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
மதுரை மேற்கு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பெரும் அளவிற்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அங்கு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் புகார் அளித்துள்ளதாகக் கூறிய நரேஷ் குப்தா, அந்த புகார்களின் அடிப்படையில் ஓர் அறிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாகக் கூறினார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நரேஷ் குப்தா கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படியும் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது குற்றம் என்று கூறிய நரேஷ் குப்தா, இதனை தடுக்கும் நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறினார்.
வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்க மறுத்த நரேஷ் குப்தா, அந்த குற்றச்சாற்றை தான் மறுக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. ஆனால் அது தொடர்பான ஆதாரங்களை வரவேற்பதாகக் கூறினார்.
நரேஷ் குப்தா அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை தள்ளிவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். (யு.என்.ஐ.)