தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கேரளா, கடலோர கர்நாடகம், கடலோர ஆந்திர மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருவது மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது குறித்து இன்று அறிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டிலும், புதுவையிலும் ஆங்காங்கு மழையோ அல்லது இடியுடன் கூடியோ மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வானம் அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உத்தரகன்னடா மாவட்டம் பத்காலில் மிக அதிகமாக 24 செ.மீ. மழை பெய்துள்ளது. உடுப்பி மாவட்டம் கோட்டா 16 செ.மீ., தட்சணகன்னடாவில் உள்ள முடிபித்ரே, முல்கி, உடுப்பி மாவட்டம் குண்டாபூர் ஆகிய இடங்களில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை, பன்ருட்டி, செய்யாறு, வால்பாறை ஆகிய இடங்களில் 3 செ.மீ., காஞ்சிபுரம், நாகர்கோயில், செம்பரம்பாக்கம், கொரட்டூர், தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.