சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்திறங்கிய கொரியர் விமானத்தின் சக்கரத்தில் தீப்பற்றி எரிந்ததால் விமானப் போக்குவரத்து சற்றேறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்டது!
ஃபர்ஸ்ட் ஃபிளைட் கொரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த சரக்கு விமானம், பெங்களூருவில் இருந்து பழைய விமானதளத்தில் தரையிறங்கும் போது அதன முன் சக்கரத்தில் தீ பற்றியது. இதனைக் கண்ட விமானிகள், விமானத்தை நிறுத்திவிட்டு தரையில் குதித்து உயிர் தப்பினர்.
உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு வண்டிகள் விமானத்தில் பற்றிய தீயை தண்ணிரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
விமானம் ஓடு பாதையின் நடுப்பகுதியில் நின்றிருந்ததால் அதன் காரணமாக மற்ற விமானங்கள் புறப்பட இயலவில்லை. இதனால் விமானப் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. (யு.என்.ஐ.)