2001 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவைகளில் 2 தொகுதிகளுக்கு மேல் தான் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் உறுதிப் பிரமாணம் எடுத்திருந்தார்.
ஜெயலலிதா இவ்வாறு தவறான உறுதிமொழி அளித்து விதிமுறைகளுக்கு முரணாக ஆண்டிப்பட்டி, தர்மபுரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 33 (7) (பி) கீழ் தவறானது என்று கூறி, அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தி.மு.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சி. குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ் எலிப்பி, எஸ். பழனிவேலு ஆகியோர் கொண்ட நிதிமன்ற அமர்வு, பெரும் பதவிகளை வகித்தவர்கள் மக்களுக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டுமே தவிர இப்படி அப்பட்டமாக விதிமுறைகளையும், சட்டங்களையும் புறக்கணித்துவிட்டு நடந்துகொள்ளக் கூடாது என்றும், இப்படிப்பட்ட நடவடிக்கைகளை சாதாரணமாக விட்டுவிட இயலாது என்றும், அவ்வாறு செய்தால் அது சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை திசை திருப்பிவிடும் என்றும், நம்பிக்கை இழக்கச் செய்யும் என்றும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.
விதிமுறைகளுக்கு முரணாக தவறான வாக்குமூலம் அளித்து 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்த ஜெயலலிதா மீது தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.