சிக்குன் குனியா நோய்க்கு என்று தனியாக எந்த மருந்தும் இல்லை. யாராவது சிக்குன் குனியா மருந்து என்று எதையாவது விற்றால் அந்த மருந்துக் கடையின் உரிமத்தை அரசு ரத்து செய்யும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்!
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் சிக்குன் குனியா நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் பி.கே. சுப்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழகத்தின் கேரள எல்லையோர மாவட்டங்களான தேனி, கோவை, நெல்லை, குமரியில் சிக்குன் குனியா பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் அனைவரும் பரிசோதனை செய்யப்படுவதாகவும், யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு அந்தப் பகுதியிலேயே உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறினார்.
"சிக்குன் குனியா நோய்க்கு என்று தனிப்பட்ட மருந்து எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பதன் மூலம் மட்டுமே அந்த நோய் பரவாமல் தடுக்கலாம். எனவே சிக்குன் குனியா மருந்து என்று கூறி யாராவது மருந்துக் கடைகளில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்தால் அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்" என்று கூறிய அமைச்சர், சிக்குன் குனியா தடுப்பிற்கு அரசு சுகாதார மையங்களில் போதுமான அளவிற்கு மருந்து தருவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சிக்குன் குனியா நோயை உண்டாக்கும் கொசுக்களின் குழுக்களை அழிக்க தம்புச்சியா என்றழைக்கப்படும் மீன் இனத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக அமைச்சர் கூறினார். (யு.என்.ஐ.)