முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்து அதிமுக.வினர் இன்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமனோர் கைதுசெய்யப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாக வெளியான தகவலை அடுத்து, அவரது வீட்டின் முன் நேற்று தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் அதிமுக.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில், அண்ணாசலை, எழும்பூர் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராடத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான தொணடர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழ் நாடு முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக அதிமுக.வினர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது, தடுத்த காவல்துறை ஆய்வாளர் கால்களில் தீப்பிடித்தது. இதையடுத்து அவர் உடனடடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கணபதி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம், திருவள்ளூவர், கோவை மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் நடந்த போராட்டதில் அதிமுக.வினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.