தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற சுயமரியாதை திருமண சட்டத்தை இந்திய முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி, மத்திய சட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2006 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில், சுயமரியாதை திருமண சட்டத்தை போன்ற ஒரு சட்டம் இந்திய அளவிலும் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது,
இதனை நிறைவேற்ற கருணாநிதி ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது முதலமைச்சர் கருணாநிதி, மத்திய சட்டத் துறை அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தை போன்றதொரு அமைப்பை இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்திட வேண்டும் என்று ஏற்கனவே நான் தெரிவித்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.
சமுதாய நல்லிணக்கத்தை ஊக்குவித்திட இது போன்ற திருமணங்களை அரசு ஆதரித்திட வேண்டும். இந்த கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் ஆழமாக பரிசீலனை செய்து சாதகமான முடிவினை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.