மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் கருணாநிதி படித்த அறிக்கையை திருத்தி வெளியிட்டதாக தமிழ் முரசு மாலை நாளிதழ் மீது சட்டப்பேரவையில் உரிமையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது!
தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றில் காங்கிர உறுப்பினர்கள் ஞானசேகரன் ஜெயக்குமார் ராமன் கோவைத் தங்கம் ஆகியோர் பேரவையில் முதலமைச்சர் படித்ததாக தமிழ் முரசு வெளியிட்ட செய்தியில் அவர் சொல்லாதவற்றை எல்லாம் வெளியிட்டுள்ளார்கள் என்றும் இது உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி பேரவையின் உரிமையை மீறிய செயல் என்றும் பேசினர்.
"அழகிரியின் படுகொலைகள்" சிபிஐ விசாரிக்கும் - சட்டப்பேரவையில் கருணாநிதி என்று தமிழ் முரசு வெளியிட்ட அந்த செய்தி பேரவையில் முதலமைச்சர் தனது அறிக்கையில் சொல்லாத வார்த்தைகள் என்று கூறிய ஞானசேகரன் எனவே அவையின் உரிமையை மீறிய தமிழ் முரசு மீது அவை உரிமை மீறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்ற பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தமிழ் முரசு பேரவை உரிமையை மீறியுள்ளதா என்பது குறித்து ஆராயுமாறு பேரவை உரிமைக் குழுவிற்கு உத்தரவிட்டார்.