Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாக்கி : மணிசங்கர் ஐயர் மீது அஸ்லாம் ஷெர் கான் கடும் தாக்கு!

Advertiesment
ஹாக்கி : மணிசங்கர் ஐயர் மீது அஸ்லாம் ஷெர் கான் கடும் தாக்கு!
, வெள்ளி, 14 மார்ச் 2008 (14:18 IST)
இந்திய ஹாக்கி முன்னாள் நட்சத்திரமும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்லாம் ஷெர் கான், இந்திய ஹாக்கி கூட்டமைப்புத் தலைவர் கே.பி.எஸ்.கில் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய ஹாக்கியை சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் தலையீட்டை கோரவேன்டும் என்றும் அஸ்லாம் ஷெர் கான் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூரில் 1975 ஆம் ஆ‌ண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜீத்பால் சிங் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அஸ்லாம் ஷெர் கான், இந்திய ஹாக்கி கூட்டமைப்புத் தலைவர் கே.பி.எஸ்.கில்லை தூக்கி எறிய ஆதரவு தெரிவிக்கும் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளார். இது வரை 100 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார்.

ஹாக்கி விளையாட்டிற்காக அரசு அளிக்கும் உள்கட்டமைப்பு, பயிற்சியாளர்கள், கூட்டமைப்பிற்கு அளிக்கப்படும் நிதி உதவிகள் ஆகியவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அரசே கவனிக்கவேண்டும் என்றும் அணியின் அயல் நாட்டுப் பயணங்களுக்கு அரசே அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளதோடு, இதிலிருந்து தன்னை மட்டும் மணி சங்கர் ஐயர் விலக்கிக் கொள்ளமுடியாது என்றும் கூறியுள்ளார்.

80 ஆண்டுக் கால ஹாக்கி வரலாற்றில் முதன் முறையாக இந்தியா ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறாமல் போனது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர் என்றும், கில்லை நீக்கி ஹாக்கியைக் காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள் என்று அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் அஸ்லாம் ஷெர் கான் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை நிறைவேற்ற இதுவரை 100 நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாகக் கூறிய அவர், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 200ஐ தொடும் என்று கூறுகிறார்.

தீர்மானம் வரும் திங்கள் அல்லது செவ்வாயில் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil