ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ஹாக்கி அணி தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இந்திய ஹாக்கியை மேம்படுத்துவதற்கான தங்களது திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய ஹாக்கி கூட்டமைப்பிற்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நெருக்குதல் கொடுத்துள்ளது!
"இந்திய ஹாக்கி மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டத்தை நிறைவேற்றுமாறு ஏற்கனவே இந்திய ஹாக்கி கூட்டமைப்பை வலியுறுத்தி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. இத்திட்டத்தை ஆஸ்ட்ரேலியாவின் மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்த ரிக் சார்ல்ஸ்வொர்த் தலைமையில் நிறைவேற்றுமாறும் கூறியிருந்தது.
அத்திட்டத்தின் படி, சாண்டியாகோ இந்திய ஹாக்கி அணியின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் ரிக் சார்ல்ஸ்வொர்த்தை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
இந்த நிலையில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் எல்ஸ் வான் பிரீடா விரீஸ்மேன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தங்களுடைய திட்டத்தின் வெற்றியைப் பொறுத்தே 2010 ஆம் ஆண்டு உலக ஹாக்கி சாம்பியன் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது, சாண்டியாகோவில் இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளைக்கும் முயற்சி என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பு கருதுவதாக செய்திகள் கூறுகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தகுதி பெறாதது ஏமாற்றமளிப்பதுதான் என்றாலும், விளையாட்டுப் போட்டிகளில் இவையெல்லாம் அசாதாரணமல்ல என்று கூறியுள்ள எல்ஸ் வான் பிரீடா, தலைசிறந்த 12 அணிகள் மட்டுமே கலந்துகொள்ளும் வாய்ப்புதான் ஒலிம்பிக்கில் உள்ளது என்று கூறியுள்ளார்.
சாண்டியாகோவில் இந்திய அணி சந்தித்த முடிவு, தங்களது திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.