ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு தேர்வு செய்யப்படாத செளரவ் கங்கூலி, அடுத்த 7 அல்லது 8 மாதங்களில் ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்று தான் எண்ணியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பையில் எப்படியிருந்தாலும் தான் ஆடுவதாயில்லை என்பதை தான் தெரிவித்திருந்ததாக கங்கூலி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் அவ்வளவாக இல்லை எனும்போது அணித் தேர்வுக் குழுவினர் தன்னிடம் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் எனது பங்கேற்பு குறித்து கேட்டனர் என்றும், இன்னும் 7 அல்லது 8 மாதங்களுக்கு தான் ஆட விரும்புவதாக் தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் சாம்பியன் கோப்பை ஒரு நாள் தொடர் வரை ஆடத் தான் திட்டமிருந்ததாகவும், அதன் பிறகு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
"இந்த நிலையில் நான் ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்டது சற்று அதிர்ச்சிகரமாக இருந்தது, ஏனெனில் இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் எனது ஆட்டத் திறன் அடிப்படையில் நான் நீக்கப்படவில்லை என்பதாக உணர்கிறேன்." என்று அந்த பேட்டியில் கங்கூலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக ஊடகங்கள் தன்னைப் பற்றி எழுதியது பற்றி குறிப்பிட்ட கங்கூலி " அது மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது, என்னை ஒரு கிரிக்கெட் வீரராக முதலில் நடத்தவேண்டும், அது ஒவ்வொரு வீரரின் உரிமையும் கூட. நேர்மையாக கூறவேண்டுமென்றால் அதுதான் உண்மை, 2005ஆம் ஆண்டு முதல் எனது அணித் தலைமை பறிபோனது, அணியிலிருந்து நீக்கப்பட்டேன், அதன் பிறகு நிறைய விஷயங்கள் ஊடகங்களின் விசாரணைக்குள்ளானது, அது நானாக இருந்தாலும், அணிக்கு புதிதாக வந்திருக்கும் வீரராக இருந்தாலும், எரிச்சல் தரும் விஷயமே" என்றார்.
இறுதியாக அவர் கூறுகையில் "என்னை எனது கிரிக்கெட்டை வைத்துத்தான் மதிப்பிடவேண்டும்" என்று கூறினார் கங்கூலி.