1986ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மாரடோனா அடித்த கோல் அவர் கையில் பட்டுச் சென்றதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதனை பின்பு மாரடோனாவே "கடவுளின் கை" என்று வர்ணித்தார்.
இது குறித்து, 58 வயதான இங்கிலாந்து கால்பந்து அணியின் சிறந்த கோல் கீப்பராக கருதப்படும் பீட்டர் ஷில்டன் கருத்து கூறுகையில், "அந்த ஆட்டம் முடிந்தவுடனேயே "சாரி" என்று மாரடோனா கூறியிருக்க வேண்டும். அவர் கூறவில்லை. பீலே போன்ற உண்மையான பெரிய வீரர்கள் உடனடியாக இதனைக் கூறியிருப்பார்கள்" என்றார்.
மாரடோனாவின் அந்த கோல்தான் அந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை அரையிறுதிக்கு செல்ல விடாமல் செய்தது என்பது குறிப்பிடத் தக்கது.
"நான் எதிர்த்து விளையாடிய வீரர்களிலேயே மாரடோனாதான் சிறந்த வீரர். ஆனால் அவரது அந்த கோலிற்கு பிறகு அவரைப் பற்றிய உயர்ந்த மதிப்பை மாற்றிக் கொண்டேன். இந்த தவறான செய்கைக்காகவே அவரை நினைவு கொள்ளுமாறு அவர் செய்துவிட்டார்" எனவும் ஷில்டன் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
மேலும், இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம் "ஒன்றும் மிகப்பெரிய ஆட்டக்காரர் இல்லை" என்று மாரோடனா கூறியதற்கு கோபத்துடன் பதிலளித்துள்ள ஷில்டன், "இங்கிலாந்திற்காக 99 கால்பந்து போட்டிகளில் விளையாடிய ஒருவரை மாரடோனா இவ்வாறு மதிப்பிடுவது தவறு. பெக்காம் அளவிற்கு ஃப்ரீ கிக்குகளையும், பாஸ்களையும் மாரடோனா கோல்களாக மாற்றியிருப்பாரா என்பது சந்தேகமே" என்று கூறியுள்ளார்.