பெர்த்தின் அதிவேகமான ஆட்டக்களத்தில் இந்திய வீரர்களை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார் என்று அதிகப்படியாக கூறப்பட்டு கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆன ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் சிறிது காலம் ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்திய வீரர்கள் சிறப்பாக வீசிய பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னால், டெய்ட் வந்து விட்டார், இந்திய வீரர்களின் தலை பத்திரம் என்று அளவுக்கு அதிகமாக உயர்த்திப் பேசப்பட்ட ஷான் டெய்ட் அந்த டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.
மேலும் மைக்கேல் கிளார்க், ஆன்ட்ரூ சைமன்ட்ஸை பந்து வீச்சில் பாண்டிங் அதிகம் நம்பவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த டெஸ்ட் போட்டியும் அதன் பிறகு ஷான் டெய்ட் மீது எழுந்த விமர்சனம் ஆகியவற்றால் அவர் மனத்தளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறிது காலம் எந்த வித கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல், தனது பந்து வீச்சை மேம்படுத்தப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எத்தனை நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளப்போகிறாரோ அவ்வளவு நாட்கள் கழித்துத்தான் அவர் மீண்டும் கிரிக்கெட் உலகிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.