செஸ் போட்டியில் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், மகளிர் பிரிவுப் போட்டியில் பட்டம் வென்ற டோலா பானர்ஜி ஆகியோருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
விஸ்வநாதன் ஆனந்தும், டோலா பானர்ஜியும், 2007 ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று நமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டு மெக்சிக்கோ நகரத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஆனந்த் உலக சாம்பியனாகியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துபாயில் நடைபெற்ற உலக மகளிர் பிரிவு போட்டியில் டோலா பானர்ஜி வெற்றி பெற்று பட்டத்தை வென்றுள்ளார்.
புது டெல்லியில் நடந்த விழாவில், இவர்களது சாதனையைப் பாராட்டிய மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் இருவருக்கும் தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
டோலா பானர்ஜி அமைச்சரிடமிருந்து நேரடியாக விருதினைப் பெற்றார். விஸ்வநாதன் ஆனந்த் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவர் சார்பாக இந்திய செஸ் கூட்டமைப்பின் கௌரவ செயலர் சுந்தர் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சரிடமிருந்து பெற்றார்.