எனது பவுலிங் முறையை சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிசோதிக்க விரும்பினால் அதற்கு தயாராக இருக்கிறேன். எந்த இடத்திலும், எந்த நேரமும் சோதனைக்கு தயார் என்று ஷான் டெய்ட் கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் மீது நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, அவரது பந்துவீச்சு குறித்து நியூசிலாந்து வீரர்கள் புகார் எழுப்பினார்கள். பந்து எறிவது போல் உள்ளதாக சர்ச்சையை கிளப்பினர்.
இதனால் ஆஸ்ட்ரேலிய அணி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது பற்றி டெய்ட் கூறுகையில், 'இது போன்ற புகார்கள் எழும் போது சீக்கிரம் மறையாது. முரளிதரனுக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கும் வந்து விடக்கூடாது. நான் நல்ல முறையிலேயே பந்து வீசி வருகிறேன். இதில் மறைப்பதற்கு என்று எதுவும் இல்லை. எனவே எனது பவுலிங் முறையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) பரிசோதிக்க விரும்பினால் அதற்கு தயாராக இருக்கிறேன். எந்த இடத்திலும், எந்த நேரமும் சோதனைக்கு தயார்' என்றார்.
டெய்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், 'இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டுக்கான ஆஸ்ட்ரேலிய அணியில் டெய்டை தேர்வு செய்ய வேண்டும். அவரது பந்துவீச்சுக்கு இந்திய வீரர்கள் பயப்படுவார்கள். அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு திணறுவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.