2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர்க்கான கபடிப் போட்டி சேர்க்கப்படும் என்று ஆசிய கபடி சங்கத் தலைவர் ஜெலாட் கூறியுள்ளார்.
"பரிசு அளிக்கும் வகையிலான பெண்களுக்கான முதல் கபடிப் போட்டி வரும் 2010 ஆம் ஆண்டில் சீனாவில் நடக்க உள்ளது.
"கடந்த 1990 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. அதேபோல் பெண்களுக்கான முதல் கபடி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று ஆசிய கபடி சங்க தலைவரும், இந்திய கபடி கூட்டமைப்பின் தலைவருமான ஜெலாட் கூறியுள்ளார்.
ஆண்கள், பெண்களுக்கான 55வது தேசிய அளவிலான கபடி போட்டியை துவக்கி வைத்து பேசும்போது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலக அளவிலான முதல் கடற்கரை கபடி போட்டி அடுத்த ஆண்டு நடக்க உள்ளதாகவும் ஜெலாட் தெரிவித்துள்ளார்.
மேலும் கபடி போட்டியில் நடுவர்கள், பயிற்சியாளர்கள், அமைப்பாளர்கள், வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய "கபடியின் விதிமுறைகள்" புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
கபடி போட்டி சம்மந்தப்பட்ட பல்வேறு தகவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.