ஒரு நாள் போட்டிகளுக்கு அடுத்த கட்டமாக டெஸ்ட் போட்டிகள் ஒரு சிலவற்றை பகல், இரவு ஆட்டமாக நடத்துவது பற்றி கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா பேரவை பரிசீலித்து வருகிறது.
சமீபத்தில் இலங்கையுடன் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நேரடிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்தது பற்றி கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியாவும், ஆஸ்ட்ரேலிய வீரர்களும் தங்களது கவலையை வெளியிட்டிருந்தனர். அதாவது டெஸ்ட் போட்டிகள் அதன் ரசிகர்களை இழந்து வருகிறது என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஏதாவது கவர்ச்சி அம்சத்தை சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்ட்ரேலிய தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
பகல், இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான அடிப்படைகள் குறித்து சிந்தித்து வருவதாக கூறிய சதர்லேன்ட், அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் பகல், இரவு போட்டியாக நடத்தப் போவதில்லை. ஒரு சில டெஸ்ட் போட்டிகளை இது போன்று முயன்று பார்ப்பது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆஸ்ட்ரேலியாவில் ஷீல்ட் போட்டிகள் சில பகல், இரவு ஆட்டமாக நடைபெறுகின்றன, பெர்த், பிரிஸ்பேன் ஆகிய மைதானங்களில் பகல், இரவு போட்டிகளை அதிகமாக நடத்துகின்றனர், ஆனால் இது பேட்ஸ்மென்களுக்கு அபாயமானது என்று கூறியுள்ளார்.