இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினால் ஆஸ்ட்ரேலிய அணியை இந்தியாவால் வீழ்த்த முடியும் என்று முன்னாள் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
டிசம்பர் மாத இறுதியில் இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவுக்கு சென்று 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் வாக் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டீவ்வாக் கூறுகையில், இந்திய பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. இந்திய ஆட்டக்காரர்களால் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்களை குவிக்க முடியும். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தால், ஆஸ்ட்ரேலிய அணியை இந்தியாவால் தோற்கடிக்க முடியும்.
ஆனால் அதற்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீச வேண்டும். அப்போது தான் உலகின் சிறந்த அணியை அவர்களால் வீழ்த்த முடியும்.
ஆட்டக்காரர்கள் எத்தனை சிறப்பாக ஆடினாலும், பந்துவீச்சாளர்களால் விக்கெட்டை வீழ்த்த முடியாவிட்டால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியாது என்று ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
இந்தியா இதுவரை ஆஸ்திரேலியாவில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 டெஸ்ட்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.