இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தான் தேர்வு செய்யப்படுவதற்கு இந்திய முன்னாள் வீரர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துவருவதால் அப்பொறுப்பை ஏற்கும் முடிவை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கர்ஸ்டன் தள்ளிவைத்துள்ளார்.
பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கான சம்மதத்தை அவர் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த பிரச்சனையில் தெளிவு ஏற்படும் வரை தனது முடிவை தாமதிக்க போவதாக கர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு மேலாளராக உள்ள லால்சந்த் ராஜ்புட் வழிகாட்டுதலில் பந்துவீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத்தும், பீல்டிங் பயிற்சியாளராக ராபின்சிங்கும் செயல்பட்டு வருவது நல்ல பலனை அளித்து வருவதால் கர்ஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க வேண்டாம் என்று சில மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதிலிருந்து தாம் விலகவில்லை என்றும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக மூத்த வீரர்கள் சிலருடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் கர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர் பொறுப்புக்கு தாம் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து மூத்த வீரர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனரா அல்லது தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனரா என்பதை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.