டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்துள்ள ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் சாதனையை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சமன் செய்துள்ளார்.
ஆஸ்ட்ரேலியா வீரர் ஷேன் வார்னே டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் உள்ளார். சமீபத்தில் இலங்கை அணி ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக முரளிதரன் 701 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
ஆனால், முரளிதரனால் அங்கு வார்ன் சாதனையை முறியடிக்க முடியவில்லை. முதல் டெஸ்ட் பேட்டியில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே முரளி பந்து வீசினார். அப்போது 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அந்த போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததால் முரளிதரனுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
அதேபோல் 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முரளிதரனால் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 704 விக்கெட்களுடன் உலக சாதனை படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் தாயகம் திருப்பினார் முரளிதரன்.
தற்போது இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்தது இலங்கை அணி. இங்கிலாந்து அபார பந்து வீச்சால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. அந்த விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றினார். இன்று ஆட்டம் துவங்கியதும் முரளிதரன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் உலக சாதனை படைத்த ஷேன் வார்ன் சாதனையை முரளிதரன் சமன் செய்துள்ளார். தற்போது முரளிதரன் 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் உலக சாதனை படைப்பார் முரளிதரன். தற்போது நடந்து டெஸ்ட் போட்டியிலேயே அந்த சாதனை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நிகழ்த்தப்பட உள்ள சாதனையை மழை தடுத்துள்ளது. மழை பெய்து வருவதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.