டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் அனில் கும்ளே ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதேபோல் வி.வி.எஸ்.லஷ்மண் இரண்டு இடங்கள் உயர்ந்து 20 வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணித் தலைவர் அனில் கும்பிளே பந்து வீச்சாளர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்து உள்ளார்.
டெல்லியில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் ஆட்ட நாயகன்விருதையும் கும்ளே பெற்றார். இதையடுத்து அவர் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இதே போல் இந்திய வீரர் வி.வி.எஸ்.லஷ்மண் பேட்டிங் தரவரிசையில் 22 வது இடத்தில் இருந்தனார். தற்போது அவர் இரண்டு இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் ஆகும். 3 ஆண்டுக்கு பிறகு அவர் முதல் முறையாக முதல் 20வது இடத்துக்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்கள் வாசிம் ஜாபர் 40-வது இடத்தையும், டோனி 41-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ராகுல் டிராவிட் 11-வது இடத்திலும், தெண்டுல்கர் 18-வது இடத்திலும், கங்குலி 28-வது இடத்திலும் உள்ளனர்.
88வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் 66-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். முகமது யூசுப் தொடர்ந்து 4-வது இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் அணித் தலைவர் மாலிக் 51-வது இடத்தில் உள்ளார்.