திடீர் உடல் நிலைக்குறைவால் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு நேற்று மாலை திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பிறகு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் அக்தர் விளையாட வாய்ப்பு குறைந்துள்ளது.
ஏற்கனவே முகமது ஆசிப், உமல் குல் ஆகியோர் காயத்தால் பாகிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் அக்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பது, பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
டெல்லியில் பயிற்சி செய்த போது கணுக்காலில் காயமடைந்த பாகிஸ்தான் அணித் தலைவர் சோயிப் மாலிக்குக்கு, காயம் பெரிய அளவில் இல்லை என்று அணி நிர்வாக வட்டாரம் கூறியுள்ளது. மாலிக் 2-வது டெஸ்டுக்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அணியின் ஊடக மானேஜர் தெரிவித்தார்.